search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகை புதிய கடற்கரை"

    நாகை புதிய கடற்கரையில் உள்ள பூங்காவில் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பியார்நகர் மீனவ கிராமம் அருகே புதிய கடற்கரை உள்ளது. இதில் சிறுவர் பூங்கா, கலை நிகழ்ச்சிகள் நடை பெறும் கலையரங்க மேடை உள்ளிட்டவைகள் உள்ளன. இது நாகை மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது.

    இந்த கடற்கரை நகராட்சி கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இந்த கடற்கரை பெரும் சேதமடைந்தது. சிறுவர் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கலையரங்க மேடை உள்ளிட்டவைகள் பேரலையில் இழுத்து செல்லப்பட்டன.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் பங்களிப்புடன் மீண்டும் கடற்கரையை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

    இதையடுத்து நாகை புதிய கடற்கரைக்கு நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும், காலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளுக்காக வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் அமருவதற்காக கருங்கற்களாலான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடற்கரையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டது. கோடைவிழாவை முன்னிட்டு புதிய கடற்கரையில் உள்ள பூங்கா உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொழிவுடன் காட்சியளித்தன.

    இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இந்த நிலையில் விழா முடிந்த மறுநாள் இரவில் மர்ம நபர்கள் சிலர் புதிய கடற்கரை பூங்காவில் உள்ள அனைத்து இருக்கைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    நேற்று காலை பொதுமக்கள் வழக்கம் போல் நடைபயிற்சிக்காக கடற்கரைக்கு சென்றபோது இருக்கைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், புதிய கடற்கரையில் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், நாகையில் உள்ள ஒரே பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் நாகை புதிய கடற்கரையில் சுழற்சி முறையில் போலீசார் நியமித்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×